எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார்!
*இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி கொடுத்த புகாரில் பேராசிரியர் மதன்குமார் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு*
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர், கார்மெண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இக்கல்லூரியில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில்
முதலாம் ஆண்டு பயிலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி உட்பட மூன்று மாணவிகள் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட பிரின்ஸ்பால் பேபி லதா கல்லூரியின் பெண்கள் பாதுகாப்பு கமிட்டியிடம் அந்த புகாரை கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே அந்த கமிட்டியினர் புகார் அளித்த மாணவிகளை அழைத்து விசாரித்தபோது மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து போலீசார் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியையும் பேராசிரியர் மதன்குமாரையும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பேராசிரியர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை அடிப்படையில் கைது நடவடிக்கை இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.