முத்துலாபுரம் ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பவானீஸ்வரர் சுவாமி ஆலயத்தில், தினசரி ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் பிரதோஷ வழிபாடு போன்ற முக்கிய தினங்களில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இதையொட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் இன்று "ஆனி மாத பிரதோஷ தினத்தை" முன்னிட்டு, நந்தி பெருமானுக்கு எலுமிச்சை, தாமரைப் பூ, அருகம்புல், மாவிலை, எருக்கம் பூ, வில்வ இலை, மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்பட்டது. இதில், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.