எட்டயபுரம் அருகே கீழே விழுந்த தங்க நகைகள் இருந்த பை உரிமையாளரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக செயல்பட்ட நபருக்கு காவல்துறையினர் பாராட்டு!




தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே சிந்தலக்கரை பகுதியில் காரில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த தங்க நகைகள் இருந்த பையை, நேர்மையாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்மா (52), தனது உறவினர் வீட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 14 ந்தேதி தேனியில் இருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தலக்கரை கிராமம் அருகே, காரின் மேல் பகுதியில் லக்கேஜ்களுடன் வைக்கப்பட்டிருந்த அவரது பை தவறுதலாக சாலையில் கீழே விழுந்துள்ளது. அந்தப் பையில் 2½ பவுன் தங்க செயின், 1 பவுன் தங்க வளையல் மற்றும் 2 கிராம் எடையுள்ள தங்க கம்மல் இருந்துள்ளது.


அதே வழியாக சென்ற கோவில்பட்டி கடலையூர் சாலையைச் சேர்ந்த ரவிக்குமார் (52), சாலையில் கிடந்த பையை கண்டெடுத்து எட்டையபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதற்கிடையில் ஷர்மா தனது நகைகள் காணாமல் போனது குறித்து  எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.


இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் விசாரணை நடத்தி  பை மற்றும் அதிலிருந்த தங்க நகைகள்  ஷர்மாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.நேர்மையுடன் செயல்பட்டு பையை காவல்துறையிடம் ஒப்படைத்த ரவிக்குமாரை எட்டையபுரம் காவல்துறையினர் பாராட்டினர்.