விளாத்திகுளம் எம். எல்.ஏ மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு!


தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது Bns 351(3),352,353(2)  ஆகிய பிரிவின் கீழ் கடுமையான குற்ற மிரட்டல், அவமதிக்கும் வகையில் அவதூறாக பேசுதல், வதந்தி மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திமுக வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதம் பரபரப்பு


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் 


இந்த கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பல்வேறு கருத்துக்களை பேசினார் மேலும் சட்டமன்றத்தில் தமிழக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார் 


இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மார்க்கண்டேயன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் இதை அடுத்து காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயின் மீது



BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation):

ஒருவரை கொலை செய்வதாக, கடுமையான காயம் ஏற்படுத்துவதாக, சொத்துகளை தீ வைத்து அழிப்பதாக, அல்லது மிகக் கடுமையான குற்றத்தைச் செய்வதாக மிரட்டுவது இந்தப் பிரிவின் கீழ் வரும். இதற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 


BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் (Intentional insult to provoke breach of peace):

ஒருவரை வேண்டுமென்றே அவமதித்து, அதனால் பொதுஅமைதி குலையவோ அல்லது அவர் குற்றச் செயலில் ஈடுபடவோ தூண்டும் வகையில் நடந்துகொண்டால் இந்தப் பிரிவு பொருந்தும். இதற்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 


BNS 353(2) – சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல்:

மதம், இனம், மொழி, சாதி, சமூக அடிப்படையில் வெறுப்பு, பகைமை அல்லது விரோத உணர்வை உருவாக்கும் நோக்கில் பொய்யான தகவல், வதந்தி அல்லது பதற்றம் ஏற்படுத்தும் செய்திகளை (சமூக வலைத்தளங்கள் உட்பட) பரப்பினால் இந்தப் பிரிவு பொருந்தும். இதற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 


ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் 


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஏராளமான திமுகவினர் குவிந்து வருகின்றனர் திமுகவினர் காவல் துறையின் இந்த கைது நடவடிக்கை எதிராக கண்டன கோஷங்களை எடுத்து வருகின்றனர் மேலும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்திக்க திமுக வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து ரூரல் டிஎஸ்பி சுதீர் மற்றும் டிஎஸ்பி செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது 


மேலும் கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் காவல்துறையினர் உள்ளே சென்று சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்திக்க அனுமதி மறுத்தனர் 


இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


 மேலும், கைது செய்யப்பட்டுள்ள மார்க்கண்டேயன் உடல்நிலை குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்