திருச்செந்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதம்!
திருச்செந்தூர் அருகே உள்ள சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (83/22) என்பவர் கடந்த 08.06.2022 அன்று அவரது வீட்டில் உடல்நலகுறைவோடு இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது மகன் சுடலைமணி (51/25) தந்தை முத்துவை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். இதற்கு முத்துவும் அவரது மனைவி ரோஜாவும் (68/25) மருத்துவமனைக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து சுடலைமணியிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுடலைமணி தாய் ரோஜாவையும் தந்தை முத்துவையும் கம்பாள் தாக்கியதில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் Cr. No. 88/2022 U/S. 294(b),324,302 IPC ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி சுடலைமணியை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி முருகன் இன்று (20.06.2025) குற்றவாளி சுடலைமணி என்பவருக்கு சட்டப்பிரிவு 302ன் படி ஆயுள் தண்டனை, ரூபாய் 3000/- அபராதமும், சட்டப்பிரிவு 324ன் படி 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 1000/- அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் எப்சி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.