தூத்துக்குடியில் ரூ,24 கோடி மதிப்புள்ள மெத்தபேட்டமைன் என்ற போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளசாராயத்தை அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 பேர் தற்போது வரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 66 பேர் சிகிச்சை பிரிவிலும், 33 பேர் தீவிரசிகிச்சை பிரிவிலும், ஒருவருக்கு கண்பார்வை இழந்துள்ளார்.இந்தகள்ளசாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ள சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாற்றும் குறித்து சோதனை செய்ய காவல்துறைக்கு தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் சோதனை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த நிர்மல்ராஜ் மற்றும் அவரது மனைவி சிவானி ஆகியோர் சுமார் 8 கிலோ எடை கொண்ட 8 பாக்கெட்களில் ஐஸ் கிரிஸ்டல் மெத்த பேட்டமின் என்ற போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் இந்தியமதிப்பு ரூபாய் 8 கோடி அளவுக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், சர்வதேச சந்தையில் ரூபாய் 24 கோடி எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக நிர்மல்ராஜ் மற்றும் அவரது மனைவி ஷிவானி, ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மல் ராஜ் அவரது மனைவி சிவானி கைது செய்த போது அவருடன் அவரது நாலு மாத கைக்குழந்தை இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தூத்துக்குடியில் சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் கிரிஸ்டல் பேட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.