விளாத்திகுளம் அருகே சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த மகாராஜன் மற்றும் அவரது நண்பர் கணேசன் இருவரும் எப்போதும் வென்றானில் உள்ள தனியார் பவர் பிளாண்டில்  பாதுகாவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இன்று இருவரும் இரவு பணிக்காக ஒரே பைக்கில் சென்றுள்ளனர். பைக் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் பகுதியில் சென்ற போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பாலூரணியை சேர்ந்த  சீனி முருகன் என்பவர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீனி முருகன், மகாராஜன், கணேசன் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 



இந்நிலையில் கீழ ஈரால் பகுதியில் இதுபோன்ற அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வருவதாகவும், தங்கள் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் நீண்ட கால கோரிக்கை வைத்திருந்த போதிலும் நிறைவேற்றவில்லை என்பதால் விபத்துக்கள் நடந்து வருவதாக கூறி கீழே ஈரால் பகுதி மக்கள் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு பக்கமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதனால் 3 மணி நேரம்  போக்குவரத்து தடைபட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.