தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15.02.2024 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது 2023 டிசம்பர் மாதம் பெய்த அதீத கன மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக விளைநிலங்களில் சில இடங்களில் மண் அரிப்பும் வேறு சில இடங்களில் இழுத்து வரப்பட்ட மணல் படிந்தும் உள்ளதை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இந்நிலங்களை சீர் செய்வதற்கு குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கிட கேட்டுக் கொண்டனர்.  வயல்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்புவதற்கும் வேளாண் பொறியியல் துறை மூலம் சீர்செய்து வழங்கப்படும் வயல்களின் இயல்பான தன்மையை மீட்டெடுக்கவும் விளைநிலங்களில் கரம்பை மண் இடுவதால் மண்ணின் தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்த இயலும் என்பதாலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.   அரசாணை எண்.50, தொழிற்துறை (MMC-1) நாள் 27.04.2017-ன்படி பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள 564 குளங்கள் / கண்மாய்கள் / ஏரிகள் / நீர்த்தேங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் வண்டல் மண் எடுக்கப்படும் அளவு மாவட்ட அரசிதழில் 20.05.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி விவசாய பயன்பாட்டிற்காக கரம்பை மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரில் அல்லது விவசாயம் செய்பவரின் பெயரில் கிராம கணக்குகளின்படி நிலங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரமாக கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து அடங்கல் பெற்று உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.எனவே விவசாயிகள் வண்டல் மண் / கரம்பை மண் எடுக்க விண்ணப்பித்து பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.