எட்டையபுரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : காவல் நிலையத்தில் வைத்தே போலீசாரை மிரட்டிய குற்றவாளி..!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் சின்னச்சாமி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் புல்லட் ராணி பாக்குகளை காரில் கடத்தி வந்து இளம்புவனம் கிராமத்தில் கடையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று எட்டையாபுரம் - கோவில்பட்டி சாலையில் ஐகோர்ட் மகாராஜா கோவில் செல்லும் விலக்கு அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவ்வழியில் சந்தேகப்படும்படி ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததையடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அதன் அருகில் செல்லும்போது காரில் இருந்து சின்னச்சாமி தப்பி ஓட முயன்ற போது காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சின்னச்சாமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார் டிக்கியை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் புல்லட் ராணி பாக்குகளை கடத்தி வந்தது தெரியவந்தது. பின் உடனடியாக காவல்துறையினர் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து சின்னச்சாமியை கைது செய்து எட்டையபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சின்னச்சாமி போலீசாரை பார்த்து, "என் மீது வழக்கு பதிவு செய்தால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும், நான் யார் என்பது உங்களுக்கு தெரியாது.. நான் ஏதாவது செய்து எனக்கு என் மரணத்திற்கு காரணம் நீங்கள் தான் என்று எழுதி வைத்து விடுவேன்.." என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.