கயத்தார் அருகே நடுக்காட்டு பகுதியில்  தனி ராஜ்ஜியம் நடத்திய  ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்!


விருதுநகர் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU) போலீசார் தகவலால் நடுக்காட்டு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்,நடுக்காட்டில் குடிசை அமைத்து ரேஷன் அரிசியை பதுக்கி தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த கும்பலை தேடி வரும் போலீசார்…


தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே சவலாப்பேரி கிராமத்தில் தனியார் பவர் பிளாண்ட்   ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU) போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ முரளி மேற்பார்வையில் உணவு தடுப்பு கடத்த தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அரிக்க கண்ணன், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU) உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். 


அப்போது காட்டுப்பகுதியில் குடிசை அமைத்து திறந்த வெளியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது சோதனையில் தெரிய வந்தது. சுமார் 29 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 29 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மூன்று பைக்குகள் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


நடுக்காட்டு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அருகே உப்பு மூட்டைகளும் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது அந்த வாகனத்தில் மேற்பகுதியில் உப்பு மூட்டைகளை வைத்து உப்பு ஏற்றி செல்வது போல ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. 


தற்போது பிடிபட்டுள்ள ரேஷன் அரிசி மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை விட தரம் உள்ளதாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்


பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU)  செயல்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் விருதுநகர் மாவட்ட உதவி ஆய்வாளராக இருக்கும் வெங்கடேசன் என்பவர் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ஒருவரின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்து வந்த போது இந்த ரேஷன் அரிசி கடத்தல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 29 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். 


நடுக்காட்டு பகுதியில் குடிசை அமைத்து அதற்கு பாதையும் உருவாக்கி ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது .