திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் படுகொலை எதிரொலி : தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு!
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி (38) என்பவர் விசாரணைக்கு வந்த போது,நீதிமன்ற வளாகத்தில் வைத்து கும்பல் ஒன்று மாயாண்டியை சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி ஓடினர், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்ததை கண்டித்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத வளாகத்தில் காவல்துறையினர் எந்த நேரமும் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்,அதேபோன்று நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வருபவர்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கட்டாயமான முறையில் சோதனை செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்குள் தேவையில்லாமல் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு வரும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கண்டிப்பாக ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்கு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், அவ்வப்போது நீதிமன்றத்தின் உள்ளேயும் சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் எவரும் இருக்கின்றனரா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகங்களில் பின்புறமும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியினை மேம்படுத்த வேண்டும் என்றும், மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கும் காவல்துறையினரும் (BDDS) நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.