மகன் மரணத்தில் மர்மம் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மகன் ஹரிஹரன் என்பவர் கடந்த ஜூன் மாதம் சென்னைக்கு கட்டிட நிறுவனத்தில் வேலைக்காக சென்றுள்ளார் இந்நிலையில் சில தினங்களில் ஹரிஹரன் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4-07-2024 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஹரிஹரன் இறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து கருப்பசாமி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர் இறப்பில் தொடர்புடைய கட்டிட வேலைக்கு அழைத்துச் சென்ற நபர்களான ஆறுமுகம் வரதராஜன் உள்ளிட்ட நபர்கள் மற்றும் கட்டிட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.மேலும் கட்டிட நிறுவனத்தினர் தங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு புகார் அளிக்கக்கூடாது என மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று தனது மனைவி வல்சாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கருப்பசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்த நிலையில் மண்ணெண்ணெய் எடுத்து சென்று ஆட்சியர் அலுவலகுள்ளே தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.