தூத்துக்குடியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் பிறை பூங்கா முதியோர் மகிழ்விடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கருப்பட்டி சாலை சந்திப்பு பகுதியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா முதியோர் மகிழ்விடத்தை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி க எம்.பி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எந்த நிதியையும் தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று சொல்லும் உரிமை ஒன்றிய அரசுக்கு கிடையாது. ஏனென்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறது.
தமிழகம் எக்ஸ்டல் பெடரல் ஸ்டேட். ஒன்றிய அரசுதான் அடிக்கடி கோ ஆப்ரேட்டிவ் ஃபெடரலிசம் என்கின்றனர். பிறகு ஒன்றிய அரசு கோ ஆப்பரேட் பண்ணாமலே ஃபெடரலிசம் இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மக்களுடைய போர் குணம் எந்த அளவுக்கும் குறைந்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பொது பட்டியலில் இருக்கக்கூடிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு மாநிலங்களின் மீது தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வரியும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தர முடியாது. நாங்கள் சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி நிர்பந்தங்களை, திணிப்புகளை நம் மீது செய்து கொண்டுள்ளனர். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்வில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.