புதுமைப்பெண் திட்ட மூலம் 5 லட்சம் கல்லூரி மாணவிகளும் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலமாக 3.5 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருவதாக தூத்துக்குடியில்  அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.


தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2024-25ஆம் கல்வியாண்டில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசு வழங்கும் விழா சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.அப்போது  இதுபோன்ற கலை போட்டிகள் மூலம் மாணவ, மாணவிகளின் தனித்திறன் வெளிப்படுகிறது எனவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கல்வித்துறைக்கு என்று 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 

அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவுத்திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் புதுமைப்பெண் திட்ட மூலம் ரூ.1000 உதவித்தொகயை 5 லட்சம் மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம்  3.5லட்சம் மாணவர்களும் பெற்று பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்,கலை போட்டியில், மணல் சிற்ப போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர் சுஜித் முதலிடம் பெற்றார். சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவி ஹரினி, செவ்வியல் இசை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 

மாவட்ட அளவில் 1026 மாணவர்களுக்கும், மாநில அளவில் வெற்றி பெற்ற 53 மாணவ, மாணவிகளுக்கும் அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.