தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர் கருத்தரங்கை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
உலக அளவில் உப்பு உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது ஆண்டுக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் அகில இந்திய உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உப்பு உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கம் தலைவர் பரத்ரவால் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசின் உப்பு உற்பத்தி மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் கருத்தரங்கை துவங்கி வைத்தார்.இதில் இந்தியா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான உப்பு உற்பத்தியாளர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பருவநிலை மாறுபாடு காரணமாக உப்பு உற்பத்தி குறைவதை எவ்வாறு நிவர்த்தி செய்வது மேலும் இந்தியாவில் உப்பு உற்பத்தியில் வெளிநாடுகளில் உள்ளது போன்று அதின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஏராளமான அறிவியல் வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உப்பு உற்பத்தி மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, இந்தியாவில் எவ்வாறு உப்பு உற்பத்தியை பெருக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,500 தொழிலாளர்கள் மூலம் 25 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில், தூத்துக்குடி, ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக அளவு உப்பு உற்பத்தியாகி இருக்கிறது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி தடை ஏற்படுகிறது. இதெல்லாம் எவ்வாறு நாம் கையாள வேண்டும் எனவும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம்.
தூத்துக்குடியில் முதன்முறையாக இக்கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன் அகமதாபாத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் மூலம் உப்பு உற்பத்தியில் தமிழகம் வளர்ச்சி அடையும். மேலும் உப்பு தொழிலாளர்களுக்கு வருடத்தில் மூன்று, நான்கு மாதங்கள் தொழில் இல்லாமல் போகிறது. இதனால் தமிழக அரசு உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் 32 ஆயிரம் பேருக்கு 5000 வீதம் என 16 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக கூறினார்.