வந்தே பாரத் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர்.திருநெல்வேலி முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அதன் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் ரயில்வே நிலைய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நிலைய அலுவலர்கள் பாலமுருகன், முகேஷ் குமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கோவில்பட்டி. தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களின் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் வசிக்கும் சுற்று வட்டார 40 கிலோமீட்டர் பகுதிகளைச் சார்ந்த பல லட்சம் மக்களின் தொலைதூர பயணத்திற்கு கோவில்பட்டி ரயில் நிலையமே மிக முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. கல்வி, வேலை, தொழில் ஆகிய காரணங்களுக்காக தொலைதூரம் செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரயில் நிலையங்களில் கோவில்பட்டி முதன்மையானது.செப்டம்பர் 24 முதல் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டி சார்ந்த அதிக அளவிலான மக்கள் வந்தே பாரத் ரயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே கோவில்பட்டி மக்களின் தொலைதூர பயண தேவைக்காக வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.அதேபோன்று கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய புதுடெல்லி - கன்னியாகுமரி, சென்னை - கன்னியாகுமரி, நாகர்கோவில் - சென்னை, கன்னியாகுமரி - ராமேஸ்வரம், செங்கோட்டை -தாம்பரம் ஆகிய விரைவு ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகர குழு உறுப்பினர்கள் அந்தோணி செல்வம், தினேஷ்குமார் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட 20 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.