கீழ ஈரால் சாலை மறியல் - சமாதான கூட்டத்தில் 4 மாதத்திற்குள் மேம்பாலத்திற்கான அரசாணை என்று நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் சுரங்கப்பாதையுடன் கூடிய மேம்பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் கீழ ஈரால் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அரசு தற்போது வரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் தொடர்ச்சியாக இங்கு விபத்து ஏற்படுவதாகக் கூறி நேற்றைய தினம் நடந்த இந்த விபத்தின் எதிரொலியாக அப்பகுதியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. இதையடுத்து அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், எட்டயபுரம் வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் பலர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று எட்டையபுரம் தனியார் மண்டபத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டாட்சியர் சுபா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க பாதையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கருத்திற்கு நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர், இன்னும் 4 மாத காலத்திற்குள் அங்கு பாலம் அமைக்க அரசாணை பெற்று அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 15 நாட்களுக்குள் சாலை விபத்து நடைபெறும் இடத்தில் உரிய தார் சாலை அமைத்து, Reflecting stickers மற்றும் சோலார் லைட் அமைத்து அங்கு விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் உரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..