விளாத்திகுளத்தில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கோலங்கள்..!



மத்திய அரசின் தேசியக்கல்வி கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது'' எனத் தெரிவித்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்தும், மும்மொழி கொள்கையை எதிர்த்தும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை அறிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சரான கீதா ஜீவன் உத்தரவின்பேரில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அறிவுறுத்தலின்படி, விளாத்திகுளம் பேரூராட்சி 3-வது வார்டான சன்னதி தெருவில் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழி கொள்கையை கண்டித்தும் ஏராளமான பெண்கள் தங்களது வீட்டின் முன்பு "இந்தியை திணிக்காதே..." என்ற வாசகங்களுடன் கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வை விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பார்வையிட்டார். உடன் 3-வது வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, கழக உறுப்பினர் ஆறுமுகச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் இருந்தனர்.