விளாத்திகுளத்தில், மழை காரணமாக நள்ளிரவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு ; தூக்கமின்றி மக்கள் கடும் அவதி...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நள்ளிரவில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விளாத்திகுளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விளாத்திகுளம் பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நள்ளிரவு முழுவதும் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் மழை நின்று 5 மணி நேரமாகியும் மின்சாரம் விநியோகம் செய்யப்படாதது குறித்து விளாத்திகுளம் மின்வாரிய பணியாளர்களிடம் கேட்டதற்கு, "இரவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ததால் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது அலுவலகத்தில் இருந்து மாற்றுக் கருவி கொண்டுவரப்பட்டு டிரான்ஸ்பார்மரில் பழுதை நீக்கும் பணியை செய்து வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ளனர். இதுபோன்று மழை காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், இனி வரும் மழைக்காலங்களிலாவது இதுபோன்ற மின் துண்டிப்பை தவிர்க்க விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர்களை உரிய ஆய்வு மேற்கொண்டு இதுபோன்று மின் துண்டிப்பு ஏற்படாத வகையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அத்தோடு உடனடியாக மின் பழுதுகளை சரிசெய்யும் வகையில் விளாத்திகுளம் பகுதிக்கு போதுமான மின்வாரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.