கோவில்பட்டியில் அரசு  வளாகத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை  சீரமைக்க வலியுறுத்தி துண்டு விரித்து படுத்து உறங்கும்   போராட்டத்தில் ஈடுபட முயற்சி - 6 பேர் கைது!  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம்,  நீதிமன்றங்கள், வட்டாட்சியர் அலுவலகம்,, சிறைத்துறை, கோவில்பட்டி கோட்ட துணை  காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிஎஸ்என்எல் அலுவலகம், சார்நிலை கருவூலம் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு வளாகத்தில் உள்ள சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் இப் பகுதி வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் போது அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், அலட்சியமாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் துண்டு விரித்து படுத்து உறங்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அக் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து கையில் துண்டுகளுடன் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட  முயன்றனர். அவர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  ஆறு பேரை கைது செய்து சமுதாயம் நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.