தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதி: கனிமொழி எம்.பி.ஆய்வு!
தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுவரும் புதிய முனையக் கட்டுமானப் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஆர்.ராஜேஷ், விமான நிலைய உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணியானது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த புதிய விமான நிலையத்தில் பொது மக்களுக்கு தேவையான அதிநவீன அடிப்படை வசதிகளை கொண்டதாக தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் வந்திறங்கும் வகையில், ரூ.227.33 கோடி மதிப்பில் சுமார் 17,341 சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், விமானப் போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்புத் துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 விஐபி அறைகள், ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், புதிய முனையத்தில், ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 விமானங்கள் வரை தரையிறங்கலாம் என்று கூறப்படுகிறது.