விளாத்திகுளத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!



"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இத்திட்டத்தின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அரசின் பல்வேறு துறைகளில் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். அந்த வகையில், இன்று (18/12/2024) விளாத்திகுளம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட  இ.வேலாயுதபுரம், சூரங்குடி, அரியநாயகிபுரம், இராமச்சந்திரபுரம், ஆத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற வரும் அரசு கட்டுமானப் பணிகள், மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.28,500 மானியத்தில் பேட்டரி தெளிப்பான்கள், தார்பாய்களையும், ஆவின் நிர்வாகம் சார்பில் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிரட்டும் மைய செயலாளர்களுக்கு ரொக்க பரிசுத் தொகை வணங்கி பாராட்டினார்.‌ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி உட்பட துணை ஆட்சியர், உதவி இயக்குனர், இணை இயக்குனர், விளாத்திகுளம் வட்டாட்சியர் என ஏராளமான அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.