தூத்துக்குடி துறைமுகத்திற்கு 850 கடல் மைல் கடந்து வந்த தானியங்கி புதுமையான மாதங்கி ரோந்துக்கப்பல்!
தூத்துக்குடி உள்நாட்டு உற்பத்தி திட்டத்தில் கட்டப்பட்ட இந்திய கடற்படை தானியங்கி ரோந்து கப்பல் 850 கடல் மைல் தொலைவிலிருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வந்தடைந்தது.
மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் பயனாக சாகர் டிபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புதுமையான ரோந்து கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளது. மாதங்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து கப்பல் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடியது.
இதனை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் சுமார் 1500 கடல் மைல் தொலைவிற்கு பயணிக்கும் சாகர்மாலா பரிக்ரமா பயணத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கி வைத்தார்.
அந்த கப்பல் சுமார் 850 கடல் மைல் தொலைவிற்க்கு பயணித்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ரோந்து கப்பலுக்கு தூத்துக்குடி வ உ சி சிதம்பரனார் துறைமுகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் பின்னர் தனது பயணத்தை தொடரும் என இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.