எட்டயபுரம் அருகே 2 வேன்கள் மோதல் - 28 பேர் காயம் : மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்: தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் (NH38) மேம்பாலம் அமைக்காத காரணத்தினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதே போல் இன்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டர்கள் 15 பேர் தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமையல் பணிகளை முடித்துவிட்டு, விளாத்திகுளத்தில் இரவில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் புறவழிச்சாலையில் இருந்து - விளாத்திகுளம் செல்லும் சாலை விலக்கில் வேன் திரும்பி உள்ளது. அதே சமயம் எதிர்த்திசையில் இருக்கன்குடியில் இருந்து - தூத்துக்குடி நோக்கி பக்தர்கள் சென்று கொண்டிருந்த மற்றொரு டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து சமையல் மாஸ்டர்கள் பயணித்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சமையல் மாஸ்டர்கள் பயணித்த வேன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் வேனில் இருந்தவர்கள் வெளியேறி வர முடியாமல் கதறி கூச்சலிட்டனர். பின்னர் உடனடியாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவ்வழியாக சென்ற தீயணைப்பு துறையினர் கவிழ்ந்து கிடந்த வேனுக்குள் இருந்தவர்களை கண்ணாடிகளை உடைத்து பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் இரு வேன்களிலும் பயணித்த தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த டெய்சி ராணி (39 ), ராணி (40), வசந்தி (38), தெரசா (42), வீரபாகு (60), மூர்த்தி (56), வள்ளி (38), காளியம்மாள் (40), முத்துமாரி (35), பாண்டி (55), ஜெயலட்சுமி (38), அஞ்சலி (37) 12 பேர் பலத்த காயமடைந்தனர். 16 பேர் லேசான காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பலத்த காயமடைந்த 12 பேர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை தூக்கி அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் நடந்து வருவதால் விளாத்திகுளம் - எட்டையபுரம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தும் தற்போது மத்திய, மாநில அரசுகள் சற்றும் செவிசாய்க்கவில்லை என்பதே நிதர்சனம்.... அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் அனாமத்தாக போவதை தடுக்க உடனடியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.....