கழிவு நீராக வரும் குடிநீர் - நகராட்சியில் அரை நிர்வணப்போராட்டம் நடத்திய நகர்மன்ற உறுப்பினர் - கோவில்பட்டியில் பரபரப்பு!  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களாக நகராட்சியினால் வழங்கப்படும் குடிநீர் கழிவு நீர் போல கலங்கலாக வருவது மட்டுமின்றி துர்நாற்றமும் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிநீரை பயன்படுத்த முடியமால் விலைக்கு குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும், தொடர்ந்து குடிநீர் கழிவு நீர் போல வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவை சேர்ந்த 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விஜயக்குமார் மற்றும் பா.ஜ.கவினர் கோவில்பட்டி நகராட்சி முன்பு கழிவு நீர் போல் வந்த குடிநீரை வாட்டர் பாட்டில்களில் கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்மன்ற உறுப்பினர் விஜயக்குமார் மேல் சட்டை இல்லமால் அரை நிர்வாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கழிவு நீர் இல்லமால் சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து பேச்சு வார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர்.