தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 2019 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும், தற்போதும் நெடுஞ்சாலை துறை சார்பில், சேதமடைந்த சாலைகளில் புதிய சாலைகளும் அதே போன்று ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிராமபுற சாலைகளும் அமைக்கப்பட்டது. அவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் 90% சாலையின் இருபுறமும் சாலையையொட்டி சரள்மண் போடப்படாததால், எதிரெதிரே வாகனங்கள் விலகும் போது நிலை தடுமாறி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக... கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வில்வமரத்துப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கால் பறிபோனது, அதேபோல் காடல்குடி காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்ற காவலர் ஒருவரும் நிலைதடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். குறிப்பாக தற்போது நெடுஞ்சாலை துறையின் மூலம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பருவக்குடி to வேம்பார் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் விளாத்திகுளத்தில் இருந்து சூரங்குடி செல்லும் வழியில் அமைக்கப்பட்ட சாலைகளில் இருபுறமும் சரள் மணல் ஏதும் போடப்படாமல்.... பெயருக்கு ஏற்கனவே பள்ளத்தில் உள்ள கரம்பை மண்களை சுரண்டி சாலை பக்கபாட்டில் ஜோடித்து வைக்கின்றனர். இந்த கரம்பை மண்கள் வரும் மழைக்காலங்களில் கரைந்து ஓடிவிடும். இதனால் சாலை இருபுறமும் பக்கவாட்டு மண் இல்லாததால் இரண்டு அடிக்கு மேல் பள்ளம் விழ வாய்ப்புள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. இதேபோல் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் நிலையும் இதுதான் என்பதே நிதர்சனம். ஒரு சாலை போடுவதற்கு அரசிடமிருந்து ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரருக்கு அரசு கொடுக்கும் தொகையில் அனைத்துமே 100% திருப்திகரமாக இருக்க வேண்டும், இதில் சாலையின் இருபுறமும் மணல் போடுவதும்கூட ஒப்பந்தமிடப்பட்ட தொகையில் உள்ளது. ஆனால், எந்த ஒப்பந்தகாரர்களும் புதிய சாலைகளின் பக்கவாட்டிற்கு மண் அடிப்பது கிடையாது. முறையாக சாலை பணி செய்யாமல் சரள் மண் போடுவதற்கான பணத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வருகின்றனர்.
(இதில் குறிப்பாக.... ஒவ்வொரு சாலை அமைப்பதற்கும் நடைபெறும் பூமி பூஜையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு சாலைப் பணி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சாலையை தரமாகவும், சாலையின் இருபுறமும் மணல் போட வேண்டும் என்று அறிவுறுத்து வந்தாலும் ஒப்பந்ததாரர்கள் எம்.எல்.ஏ பேச்சையும் பொருட்படுத்தாமல் "நானே ராஜா நானே மந்திரி" என்பதைப் போல்தான் உள்ளது அவர்களின் செயல்பாடு.)
எனவே, சாலை பணிகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்