தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிழக்குத் தெருவை சேர்ந்த பாலகுமார் என்பவரின் மனைவி மண்டோதரி. இவர் தனது வீட்டின் முன்பாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக பெட்டிக்கடை ஒன்றை அமைத்து கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு 9 மணி அளவில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மண்டோதரி வீட்டிற்கு சென்று அவரது பெட்டிக்கடை அமைந்திருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நிலம் என்று கூறி இந்த பெட்டிக்கடையை அகற்ற வேண்டும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மண்டோதிரியையும் அவரது குடும்பத்தினரையும் தங்களது சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பதாகவும், யாரும் இவர்களுடன் பேசக்கூடாது என்றும் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மண்டோதரி பிரச்சனை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மண்டோதரியின் பெட்டிக்கடையை சுற்றி கம்பி வேலி அமைத்து அடைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை சார்பில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.