"திமுகவிற்குதான் பாரதியாரையே பிடிக்காதே : இடிந்த பாரதியார் வீட்டை கனிமொழி எம்.பி. வந்து பார்க்க கூடவில்லை...!" - அரசு அனுமதி தந்தால் நாங்களே சீரமைப்பு பணியை செய்வோம் - பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி மழையின் காரணமாக இடிந்து விழுந்து வீடு முற்றிலும் சிதலமடைந்து காணப்படுகிறது. பாரதியாரின் இல்லம் இடிந்து விழுந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை இல்லத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்து பாஜக சார்பில் எட்டயபுரத்தில் நேற்றைய தினம் பாரதி இல்லத்தை சீரமைக்க யாசகம் பெறும் போராட்டம் நடத்தப்பட்டதால் 65-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பின் சிதலமடைந்து கிடக்கும் மகாகவி இல்லத்தை நேரில் சென்று பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
மகாகவி பாரதியார் இல்லம் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்ய வேண்டிய விஷயம் இது.. ஆனால் பல நினைவூட்டல்களுக்குப் பின்னரும் திமுக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை, வீட்டின் மேல் ஏதோ படுதாவ போட்டு பராமரிப்பு பணிகள் நடக்கிறது என்று அறிவிப்பு பலகை மட்டும் தான் இருக்கு..வேலை எதுவும் நடந்தமாறி இல்லை.. திமுக அரசு கருணாநிதி காலத்தில் இருந்தே பாரதியாருக்கு எதுவும் செய்யவில்லை.. பாரதியாரின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக இது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தொகுதியில்தான் வருகிறது. அவர் தொகுதியைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதே இல்லை, ஓட்டு என்றால் மட்டும் தான் தேர்தல் நேரத்தில் ஓடோடி வருவார், ஆனால் அவரது தொகுதியில் இருக்கும் பாரதியார் இல்லம் மேற்பகுதி இடிந்து சிதிலமடைந்து இருக்கிறது. அதைப் பற்றி அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை... பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலேயே இதை சரி செய்யலாம், ஆனால் அவர் இங்கு வந்து கூட பார்க்கவில்லை. சும்மாவே வர மாட்டாங்க.. பாரதியாரைத்தான் திமுகவிற்கு பிடிக்காதே பின் எப்படி வருவார். இந்த பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் கூட பாரதியாரின் இல்லத்தை சரி செய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ஆனால் அரசுதான் அனுமதி அளிக்க வேண்டும். அரசாங்கம் அனுமதி அளித்தால் பாஜக சார்பில் நாங்களே இதை சரி செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் ஆனால் தூத்துக்குடியில் மட்டும் பாரதி ஜனதா கட்சிதான் அதில் எங்களுக்கு சந்தேகமே கிடையாது. இதை கௌரவ பிரச்சினையாக ஆக்காமல் உடனடியாக பாரதியாருக்கு அவரது நினைவு இல்லத்தில் கட்டிடங்களை சரிசெய்து புதிய பொலிவுடன் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.