தூத்துக்குடியில் போலி ஈமெயிலில் பணம் அனுப்பி ரூபாய் 20000 மோசடி செய்த உத்தரப்பிரதேச இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனம் தங்களது நிறுவனத்திற்கு தேவையான இல்மனைட் தாதுவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டு வர திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது. இதனையடுத்து மேற்படி ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பெயர் போன்றே வந்த ஈமெயிலில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூபாய் 20 லட்சம் பணத்தை மூலப் பொருட்கள் கொண்டு வர மேற்படி ரசாயன உற்பத்தி நிறுவனம் அனுப்பியுள்ளது.
பின்னர் திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மேற்படி ரசாயன உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு மூலப்பொருட்கள் கொண்டுவர எங்களுக்கு பணம் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மேற்படி நிறுவனம் தங்களுக்கு வந்த இமெயில் ஐடி-யை சோதனை செய்தபோது அது திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் இமெயில் ஐடி இல்லை என்பதும் தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேற்படி ரசாயன உற்பத்தி நிறுவனத்தின் போதுமேலாளர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சகாய ஜோஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் உத்திரபிரதேசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த விஜேந்திரசிங் மகன் மோகித் பரிகார் (26) என்பவர் மேற்படி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் மோகித் பரிகாரை கைது செய்து கடந்த 24.11.2024 அன்று தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் பணம் மோசடியில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு எதிரியான உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீல் உதின் மகன் சமீல் உதின் (25) என்பவரை மேற்படி தனிப்படை போலீசார் உத்திரபிரதேசம் சென்று கடந்த 20.12.2024 அன்று கைது செய்து நேற்று (23.12.2024) தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.