திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா - காவல்துறை முக்கிய அறிவிப்பு ?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 02.11.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக வருகின்ற 06.11.2024 மற்றும் 07.11.2024 ஆகிய இரு தினங்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி மேற்படி இரண்டு தினங்கள் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்படி இரண்டு தினங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மார்க்கமாக உவரி கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லவும். அதேபோன்று கன்னியாகுமரியிலிருந்து வரும் தனியார் வாகனங்களும் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து திருநெல்வேலி மார்க்கமாக உவரி வழியாக வரவேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 02.11.2024 அன்று கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர். 2 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சி காவல்துறையினரின் முன்னேற்பாடுகளால் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
மேலும் 07.11.2024 அன்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்விற்கு சுமார் 4500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்கள் வசதிக்காக 18 இடங்களில் மொத்தம் சுமார் 20,000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டும், பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 4 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைத்தும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டும், 4 இடங்களில் அவசர மருத்துவ உதவி மையம், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும், 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் (TNSDRF) தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பொதுமக்களோடு மக்களாக கலந்து குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குறிபிட்ட எல்லையில் கயிறு கட்டியும், ரோந்து படகுகள் மூலம் காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபடுவர், கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்களில் பெரிய திரை அமைப்பு நிறுவப்பட்டு சூரசம்ஹார நிகழ்வை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்தும், கோயிலை சுற்றி தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் நிர்வாக விடுதி அறைகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆகவே பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்யவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
எனவே இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.