எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்ல சீரமைப்பு பணிகள் தொடக்கம்!

 

 

 

முண்டாசுக் கவி என்று அன்போடு அழைக்கப்படும் மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில்  பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இக்கட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

 

 

1973-ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனார் தலைமையில் 12.5.1973-ம் தேதி நடந்த விழாவில் பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் பாரதி பிறந்த வீடு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் மார்ச் 25 ஆம் தேதி மாலை 6 மணியளவில் பாரதியார் இல்லத்தின் முன்பக்க மேல்மாடி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக்கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. நூற்றாண்டு பழமையான அந்த இல்லத்தின் மேல் தளத்தின் மேற்கூரையில் தேங்கியிருந்த மழைநீர் மற்றும் நீர்க்கசிவு காரணமாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது

 

 

 மூன்று மாதங்கள் கடந்தும் அங்கு எந்தவித மறுசீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. சேதமடைந்த அடுத்த நாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து மேற்கூரையை முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு வீட்டின் முகப்பில் சவுக்கு கம்புகள் கட்டி தடுப்புகள் ஏற்படுத்தி அதில் வலைகளை பொருத்தி விட்டு சென்றனர். அத்தோடு பணிகள் எதுவும் அந்த வீட்டில் நடைபெறாமல் இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த செய்திகள் வெளியாகியன.இந்நிலையில் பாரதியார் இல்லத்தின் சீரமைப்பு பணிகள் தொடங்கின.