"என் உயிரைக் காப்பாத்துங்க சார்..." - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கண்ணீர் மல்க பேட்டி : CCTV ஆதாரங்களுடன் பல புகார்கள் அளித்தும் கண்டுகொள்ளாத காவல் துறை : தமிழக டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா?



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த பியூலா ஜெபராணி (58) என்பவர் கழுகாசலபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக  புதூரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் 2 மகன்களுடன் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான சுமார் 18 சென்ட் (800 ச.மீ) பரப்பளவு கொண்ட வீடு மற்றும் இடத்தை  பார்த்திபன், பாண்டிச்செல்வம் ஆகிய நபர்கள் போலி பட்டாவை தயார் செய்து கொண்டு தங்களது இடம் என்று கூறி தொடர்ந்து அராஜகம் செய்து வருவதாகவும், கடந்தாண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தன்னை தாக்கியதோடு மட்டுமின்றி, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் இதுசம்பந்தமாக புதூர் காவல் நிலையம் முதல் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகம் வரை என பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்ணீர்விட்டு கூறுகிறார் பெண் தலைமை ஆசிரியர் பியூலா ஜெபராணி. அதுமட்டுமின்றி, தனக்கும், தனது உடமைகளின் பாதுகாப்பிற்காக வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட CCTV கேமிராக்களையும் பொய்யாக நில உரிமைக்கோறும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு  வரும் புதூரைச் சேர்ந்த கிருஷ்ணக்குமார் உட்பட அவரது குடும்பத்தினர் சமீபத்தில் CCTV கேமிராக்கள் மற்றும் தனது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் இது தொடர்பாக அவர்களின் மீது காவல்துறையில் உரிய நில ஆவணங்கள் மற்றும் CCTV காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக நடந்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மீது புகார் கூறுவதோடு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பியூலா ஜெபராணி. 


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசு அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வரக்கூடிய அசாதாரண சூழ்நிலையில், விளாத்திகுளம் அருகே அரசுப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பெண் தலைமை ஆசிரியை ஒருவரே... "தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, காவல் துறையும் கண்டுகொள்ளவில்லை... என் உயிரைக்காப்பாத்துங்க சார்.." என்று கண்ணீர் விட்டு பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும், இந்த இடப்பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு அட்டூழியங்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளாகி வரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பியூலா ஜெபராணி, உரிய ஆவணங்கள் மற்றும் CCTV ஆதாரங்களுடன் தான் அளித்த புகார் மனுவின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்-க்கு உடனடியாக உத்தரவு பிறப்பிப்பதோடு தன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியரான தன்னுடைய புகாரை  முறையாக விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறையினர் மீதும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தலைமை ஆசிரியர் பியூலா ஜெபரானியின் சகோதரர் ஆசிர் பாக்கியராஜ் தற்போது இஸ்ரோ இயக்குனராக உள்ளதாக கூறப்படுகிறது...



பேட்டி: பியூலா ஜெபராணி - பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியை…