தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை,சான்றிதழ் வழங்கிய கனிமொழி எம்.பி !
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியுதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித் தொகை வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
இந்தநிகழ்வில், திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களையும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மருத்துவ உபகரணங்களையும், ஓய்வுபெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேம நல நிதியிலிருந்து வட்டித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி: யாரும் எந்த மொழியையும் படிக்கக்கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டு மக்களிடம் சொன்னது இல்லை.
ஒரு மொழி திணிப்பு என்று வரும்போது தான் அதனை எதிர்க்கின்றோம். அதை, ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். மொழியை ஒரு சாய்ஸாக படிக்க வேண்டும். மொழியைத் திணித்து படிக்கும் போது, வேறு வழியில்லாமல் படிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது இருக்கக்கூடிய வித்தியாசங்களை பாஜக முறையாக புரிந்து கொள்ள வேண்டும். பாஜக ஆட்சிக்கு வரும்போது, கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டு இருக்கிறது. சமஸ்கிருதம் படிக்கும் போது என்ன பயன் என்று நாம் கேட்கலாம். இவ்வாறு மொழி திணிப்பு, ஆதிக்கத்தினுடைய திணிப்பு இதையெல்லாம் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்று பேசினார்.