எட்டையபுரம் NH-ல் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடி பெண் காங்கிரஸ் கவுன்சிலர் பலி!



தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த அசோகன் என்பவரது மனைவி அன்பு ராணி (55) உடன்குடி பேரூராட்சியில் 8-வது வார்டு கவுன்சிலராக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரானஅன்புராணி மருத்துவமனைக்கு செல்வதற்காக இன்று காலை உடன்குடியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு தனது மகன் நேரு மற்றும் மருமகள் இந்து ஆகியோருடன் தனது காரில் சென்றுள்ளார். காரை அன்புராணியின் மகன் நேரு (31)  ஒட்டி வந்துள்ளார். 




இவர்கள் வந்த கார் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை அருகே வந்து கொண்டிருந்தபோது காரை ஒட்டி வந்த நேரு தூக்கக்கலக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டிராக்டரின் மீது வேகமாக மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற உடன்குடி பேரூராட்சி காங்கிரஸ் பெண் கவுன்சிலர் அன்புராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் சென்ற அவரது மகன் நேரு மற்றும் மருமகள் இந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த பெண் கவுன்சிலர் அன்புராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.