"விடியா ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறையின் மெத்தனத்தால்தான் இக்கொலை நடந்துள்ளது" - ஓட்டப்பிடாரம் அருகே  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்!



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் முத்துபாலகிருஷ்ணன் முன்விரோதம் மற்றும் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நேற்றுமுன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி கருணாகரன் என்பவர் மூலமாக லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக முக்கிய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் சூழ்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன் உட்பட ஏராளமான அதிமுகவினர் இன்று கொல்லம்பரும்பு கிராமத்தில் அமைந்துள்ள முத்து பாலகிருஷ்ணனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட அதிமுக கிளைச் செயலாளர் முத்து பாலகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியதோடு, முத்து பாலகிருஷ்ணனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்தார். 




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ;


திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் கேள்விக்குரியதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையாகவும், தொடர் கொலை, கொள்ளை ஆகியவை அன்றாட நிகழ்ச்சிகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த  முத்து பாலகிருஷ்ணன் அதிமுகவில் கிளைச் செயலாளர் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அவரது மனைவி வள்ளியம்மாள் 1996-2001 வரை ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றியுள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கருணாகரன் என்பவரால் தேர்தல் போன்ற முன் விரோதம் காரணமாக இவர் தொடர்ந்து விரட்டப்பட்டு வந்துள்ளார். இது பற்றி ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்தும் அவர்கள் உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் குறுக்குச்சாலை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் முத்து பாலகிருஷ்ணன் சென்று கொண்டிருந்த போது பட்டப்பகலில் திமுக நிர்வாகி கருணாகரனுக்குச் சொந்தமான டிப்பர் லாரியால் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இங்கு சாதாரண மக்களுக்கும் பாதுகாப்பில்லை, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பில்லை. இந்த துப்புக்கெட்ட ஆட்சியில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை போன்ற வழக்குகளில் தற்போது வரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்த அதிமுக கிளைச் செயலாளர் முத்து பாலகிருஷ்ணன் காவல் துறையிடம் உயிருக்கு ஆபத்து இருப்பதை தெரிவித்தும் காவல் துறையின் அலட்சியம் காரணமாகத்தான் இக்கொலை நடந்துள்ளது என்று காவல் துறை மீது கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.