தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி கட்டி விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழக துணை முதல்வரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ள வருகைதர உள்ளார். இதற்காக தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் துணை முதல்வர் உதயநிதியின் வருகையை ஒட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழை காரணமாக தாங்கள் பயிரிட்டு இருந்த அனைத்து பயிர்களும் முற்றிலுமாக பாதிப்படைந்ததால் நிவாரண தொகை மற்றும் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தபோதிலும் தமிழக அரசால் விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட வந்தனர். இதன் காரணமாக நவம்பர் 14ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ள வரும் தமிழக துணை முதல்வர் உதயநிதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து விவசாயிகளும் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை காட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.