விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்; உணவுக் கண்காட்சி & கோலப்போட்டியில் அசத்திய கல்லூரி மாணவிகள்...!
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் "தேசிய ஊட்டச்சத்து மாத விழா - 2024" சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு போஷன் அபியான் திட்டத்தின் மூலம் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், தானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் கண்காட்சி படுத்தப்பட்டிருந்தன. மேலும் கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கோலப்பட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் குமாரி மாணவர்களிடம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் பற்றி எடுத்துக்கூறி சத்தான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரி பேராசிரியர் கரோலின் உடலுக்கு நன்கு ஆரோக்கியம் தரக்கூடிய கம்பு, கேப்பை போன்ற தானிய வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், துரித உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய RBSK மருத்துவர் எழிலரசி, வளரிளம் பெண்களுக்கான சுகாதாரம் மற்றும் இரத்த சோகை பற்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் CHN, SHN, One Stop Center களப்பணியாளர்கள், ICDS மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்கள், ஏராளமான கல்லூரி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.