தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகளும், அதற்கான மின் கம்பங்கள் நடும் பணிகளும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குளத்தூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவர் குளத்தூர் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளுக்கான மின் கம்பங்கள் அமைக்கும் பணிக்கு 3 தனியார் காற்றாலை நிறுவனங்களிடம் துணை ஒப்பந்தம் செய்து பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவ்வாறு தனிநபர் நிலங்களில் மின்கம்பங்கள் அமைப்பதற்கு நில உரிமையாளர்களிடம் அதற்கான பணத்தை கொடுத்தும், அதே போன்று குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு இடங்களில் மின்கம்பங்கள் அமைக்க ஊராட்சி மன்றத் தலைவர் மாலதியின் கணவர் செல்வப்பாண்டியிடம் ஒரு மின்கம்பத்திற்கு ரூ.20 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து தற்போது வரை 170 மின்கம்பங்கள் வரை அமைத்திருப்பதாகவும், ஆனால் பணம் வழங்கியதற்கான ரசீது எதுவும் ஊராட்சி சார்பில் வழங்கப்படவில்லை என்றும் ஒப்பந்ததாரர் சிவகுருநாதன் கூறுகிறார். இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று குளத்தூர் ஊராட்சி T.சுப்பையாபுரம் செல்லும் சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் மாலதியின் கணவர் செல்வப்பாண்டி மற்றும் குளத்தூரைச் சேர்ந்த ஜெயராம் இருவரும் கூடுதலாக பணம்‌ கொடுக்க வேண்டும் என்று மிரட்டி நட்டப்பட்டு இருந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியதோடு மட்டுமின்றி மின்கம்பங்களை ஜேசிபி வாகனங்கள் கொண்டு உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வப்பாண்டி மற்றும் குளத்தூரைச் சேர்ந்த ஜெயராம் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளத்தூர் காவல் நிலையத்தில் ஒப்பந்தக்காரர் சிவகுருநாதன் புகார்மனு அளித்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தற்போது வரை காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் என்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.  அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு நிலங்களில் மின்கம்பம் அமைப்பதற்கு ஒப்பந்தக்காரர் சிவகுருநாதனிடமிருந்து விதிகளுக்கு உட்பட்டுதான் பணம் பெறப்பட்டதா? அவ்வாறெனில் அவருக்கு ரசீது வழங்கப்படாததற்கான காரணம் என்ன? இல்லையேல் ஊராட்சி மன்றத்தின் தலைவரின் பெயரை பயன்படுத்தி அவரது கணவர் செல்வப்பாண்டி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயராம் இதில் முறைகேட்டில் செய்திருப்பின் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன... அதிலும் ஊராட்சி நிர்வாகம் நீர்வரத்து ஓடைகளில் ஆபத்தான முறையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுத்த அதனை அகற்ற முன்வர வேண்டும் ஆனால் இங்கு ஊராட்சி நிர்வாகமே நீர்வரத்து ஓடையில் மின்கம்பங்கள் அமைப்பதற்கு பணம் பெற்றுக் கொண்டு துணை போயிருப்பதாக செல்லப்படுகிறது. ஆகையால் இதில் உரிய விசாரணை நடத்தி அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் மாலதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.அதுமட்டுமன்றி, தனியார் காற்றாலை  நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி அதிகப்படியான மின்கம்பங்களை  இப்பகுதிகளில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் அமைத்துள்ளனர். இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக மின் கம்பங்கள் அமைக்க அனுமதி கொடுத்தது யார்? இதில் ஊராட்சி நிர்வாகத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பதை மாவட்ட ஆட்சியர் உடனடியாக முழு விசாரணை மேற்கொண்டு விதிமீறல்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.