விளாத்திகுளம் அருகே பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா: 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எத்திலப்பன்நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனி கொடைத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை அக்கிராமத்தில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட 108 பால்குடங்கள் மூலம் கோவிலில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் நன்கு அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் பால்குடம் எடுத்து வழிப்பட்டால், அனைத்து தீங்குகளும் நீங்கி, சுபகாரியங்கள் மற்றும் குடும்ப நிம்மதி கிடைக்கும் என்ற ஐதீகம் இருப்பதால் ஏராளமானோர் பால்குடம் எடுத்து அம்மனை வேண்டி வணங்கினர். அதுமட்டுமின்றி ஆண்டுக்கொருமுறை நடக்கும் இந்த பங்குனி மாத கொடைத் திருவிழாவில் அதிகளவிலான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.