விளாத்திகுளத்தில், "LIGHT SHOW" போட்டு த.வெ.க மாநாட்டிற்கு கிளம்பிய 500க்கும் மேற்பட்டோர் : 4 பஸ், 5 வேன், 8 கார்களில் வி.சாலை நோக்கி பயணம்..!




தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வி.சாலை எனுமிடத்தில் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பிரபல நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயை காண்பதற்காக விரைந்து கொண்டிருக்கின்றனர். இதைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், விளாத்திகுளம் - மதுரை சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கண்களைப் பறிக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக ஒளிர் வண்ண விளக்குகள் மூலம் "LIGHT SHOW" போட்டு உற்சாகமாக தங்களது கட்சித் தலைவர் விஜயின் அழைப்பை ஏற்று நாளை நடைபெற உள்ள மாநாட்டிற்காக இங்கிருந்து புறப்படும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, விளாத்திகுளத்தில் இருந்து 4 பஸ்கள், 5 வேன்கள் மற்றும் 8 கார்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிருந்து புறப்படுகின்றனர்.

இவ்வாறு இங்கிருந்து மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை கட்டிக்கொண்டும், தங்களது கைகளில் கட்சி கொடியை ஏந்தியவாறும் இப்பகுதியைச் சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மகிழ்ச்சி பொங்க புறப்பட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.