துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.





துாத்துக்குடி -–- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எட்டையபுரம் தாலுகா, முத்துலாபுரம் பகுதியில் வைப்பாற்றின் குறுக்கே, 2009ல் பாலம் அமைக்கப்பட்டது. துாத்துக்குடி துறைமுகம், திருச்செந்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு,கனரக வாகனங்கள் உட்பட தினமும் பல்லாயிரகணக்கான வாகனங்கள், இந்த உயர்மட்ட பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.


 வைப்பாற்றின் குறுக்கே முத்துலாபுரம் பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் இதுவரை, பல முறை விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்தில், 15 மீட்டருக்கு, ஒரு இரும்பு ராடு, கான்கிரீட் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இரும்பு அடிக்கடி உடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். கனரக வாகனங்கள் வரும்போது, பாலம் அதிர்வு ஏற்படுகிறது. பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை, 17 முறை விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. பாலத்தை முழுமையாக அப்புறப்படுத்தி பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய பாலம் கட்ட வேண்டும். இதேபோல, மு.கோட்டூர் விலக்கில், புதிய உயர்மட்ட பாலம் ஒன்றையும், விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.