மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மேலக்கரந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் பகுதிகளில் கடந்த டிசம்பர் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தற்போது வரை வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதால் மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக; கடந்த 2023 - 2024-ம் ஆண்டு பாதிப்படைந்து பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டதில் பருத்தி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் தற்போது வரை பயிர் காப்பீடு விடுவிக்கப்படவில்லை என்பதால் அதனையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வெம்பூரில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், மேலக்கரந்தை காற்றாலை உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலையில் கோட்டூர் விலக்கில் சுற்று வட்டார மக்கள் நலன் கருதி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும், விளைபொருளுக்கான மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, வத்தல் போன்ற பயிர்களுக்கு அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், தெலுங்கானா மாநிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போல உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.