விளாத்திகுளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கைதைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலைக் கண்டித்து சென்னையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியினர் முற்றுகையிட சென்றபோது காவல்துறையால் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் முக்கிய தலைவர்கள் உட்பட கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சரவண கிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் கைகளில் பாஜக கட்சிக்கொடியை ஏந்தியபடி, அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு திமுக அரசைக் கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் அங்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பேருந்து நிலையம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தற்போது கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.