எட்டையபுரம் அருகே சுகாதாரமற்ற சூழலில் சிக்கி தவிக்கும் ஒரு கிராமம் ; உடனடி நடவடிக்கை இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என பாஜக-வினர் எச்சரிக்கை!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்மாய்தான் இங்குள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கி வந்துள்ளது. ஆனால், இக்கிராமத்தில் கழிவுநீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி இல்லாததன் காரணத்தினாலும், இந்த கண்மாயை உரிய பராமரிப்பு செய்யாததன் காரணத்தினாலும் இந்த கண்மாயில் தற்போது கழிவுநீர் குளம்போல் தேங்கி காணப்படுவது மட்டுமன்றி, குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் ஒருபுறமும், சீமை கருவேல மரங்கள், பன்றிகள் ஒரு புறமும் என ஒட்டுமொத்த கண்மாயை அளவிற்கு அதிகமான அசுத்தத்துடன் மிக மோசமான நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் அடிக்கடி நோய் தொற்றுக்குள்ளாகி பெரும் அவதி உற்று வருகின்றனர். இந்த கிராமத்தில் இவ்வளவு பெரிய கண்மாய் இருந்தும் சுத்தமின்றியும், உரிய பராமரிப்பின்றியும் இருப்பதன் ஒரே காரணத்தினாலேயே இங்குள்ள மக்கள் நீர் தேவைக்காக திருக்குறளில் வரும் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால், சுகாதாரமற்ற இக்கண்மாயின் காரணமாக அடிக்கடி நோய் தொற்றுக்குள்ளாகும் இங்குள்ள பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு உடனடியாக கண்மாயை முழுவதுமாக சுத்தம் செய்வதோடு, கழிவு நீர் இக்கண்மாயில் கலக்காத வகையில் கழிவு நீர் செல்வதற்கு முறையான வழிவகை செய்ய வேண்டும் என்பது இக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் இந்த கண்மாயை பார்வையிட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த கன்மையும் முழுவதுமாக சுத்தம் செய்யப்படவில்லையென்றால் கிராம மக்களுடன் இணைந்து பாஜகவினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்....