விளாத்திகுளம் அருகே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் - போதிய பொருளாதார வசதி இல்லை என்பதால் பரிதவிக்கும் மாணவி - தன்னுடைய மருத்துவர் கனவினை நினைவாக்க தமிழக முதல்வர் உதவிக்கரம் நீட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உருளைக்குடியை அடுத்து உள்ள கிராமம் ராவுத்தர்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த தம்பதி  யாக்கோபு - முருகலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். யாக்கோபு கட்டிட கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 


இந்த தம்பதியின் மூத்த மகள் சித்ராதேவி. இவர்  உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர், பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.


2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் 466 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். சித்ராதேவியின் பொருளாதார நிலையை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், தங்களது பள்ளி விடுதியில் தங்கி, நீட் பயிற்சி மையத்தில் படிக்க அனுமதித்துள்ளனர். 

முதல் 2 முறை நீட் குறைவான மதிப்பெண் பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 462 மதிப்பெண் எடுத்தார். கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்ததுள்ளது.


சித்ராதேவிக்கு முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு ரூ.8.45 லட்சம் செலுத்த வேண்டும். இதில், அவரது தந்தையின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு கீழ் உள்ளதால், படிப்புக்கான கட்டணம் ரூ.4.50 லட்சத்தை செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.95 லட்சம் செலுத்த வேண்டும்.ஆனால், அந்தப் பணத்தை செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் சித்ராதேவி உள்ளதால் அவருடைய மருத்துவக் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.


சித்ரா தேவியின் தந்தை யோக்கோபு வேலை பார்த்து தான் அவருடைய குடும்பம் நடைபெறுகிறது. அவருடைய தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடைய மருத்துவச் செலவு, சித்ரா தேவியின் தங்கையின் கல்விச்செலவு என அனைத்தும் அவருடைய தந்தையின் வருமானத்தை நம்பி மட்டுமே உள்ள நிலையில் ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணம் என்பது அவர்களால் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது 




எனவே தமிழக முதல்வரும் தமிழக அரசும்  சித்ரா தேவியின் முழுக்கல்விச் செலவையும் ஏற்று அவருடைய மருத்துவக் கனவினை நலவாக்க வேண்டும் என்பது அந்த குடும்பத்தின் கோரிக்கையாக உள்ளது. நிச்சயமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தங்களுக்கு உதவுவார் என்று மாணவி சித்ராதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.