விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி மின்னல் தாக்கி உயிரிழப்பு .
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குரளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் 17 வயது மகள் முத்துக்கெளசல்யா விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்ததை தொடர்ந்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த காரணத்தினால் தனது வீட்டின் அருகில் காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழங்கள் மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக தார்ப்பாய் கொண்டு மூடுவதற்காக அங்கு சென்ற 17 வயது சிறுமி முத்துக்கௌசல்யா திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சுயநினைனவின்றி கிடந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக முத்துக்கெளசல்யாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் சிறுமி முத்துக்கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட சிறுமியின் தாய் உட்பட உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது. மேலும் இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுமி முத்துக்கெளசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..