விளாத்திகுளத்தில்  15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடனம் மற்றும் கோலப்போட்டி!




இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியன்று "தேசிய வாக்காளர் தினம்" நாடு முழுவதும் வாக்காளர்கள்‌ மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளாத்திகுளம் வருவாய் துறையினர் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு "தேர்தல் மற்றும் வாக்குரிமை விழிப்புணர்வு"-என்பதை விளக்கும் விதமாக கட்டுரை, நடனம் மற்றும் கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விளாத்திகுளம் துணை வட்டாட்சியர் (தேர்தல்) பாலமுருகன் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வுகள் அடங்கிய பாடல்கள் மூலம் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் இந்நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பதன் அவசியம் பற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் சிறப்புரையாற்றி தங்களது பெற்றோரிடம் தேர்தலின் போது கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கூறும்படி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் வருவாய் ஆய்வாளர் ராணி, பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குமாரி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.