விளாத்திகுளம்  அருகே சாலையோர மரத்தின் மீது  ஆட்டோ மோதி விபத்து - விவசாய பணிக்குச் சென்ற 13 பெண்கள் காயம்- மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி செல்வதற்காக 108ஆம்புலன்ஸ் மூன்று மணி நேரம் தாமதமாக வந்தா அவலம்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் ஆர்சி தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவர்  சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று உதயகுமார்  தனது ஆட்டோவில் விவசாய பணிக்காக ராமனூத்து  பகுதிக்கு ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளார். ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  ஆட்டோ விளாத்திகுளம் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது பாரதி நூற்பாலை  அருகே கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி  விபத்துக்குள்ளானது இதில் ஆட்டோவில் பயணம் செய்த எட்டையபுரம் ஆர்சி தெருவை சேர்ந்த முத்துமாரி (38), சுப்புலட்சுமி (60)பத்தமா 43, மாரியம்மாள்  செண்பகவல்லி, தங்கமாரி, வேலம்மாள் உள்பட  13  பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் ஷேர் ஆட்டோவில் அதிகப்படியான ஆட்களை ஏற்றி சென்றதே விபத்துக்கான காரணம் என்பது தெரிய வந்துள்ளது



இதற்கிடையில் காயம் அடைந்தவர்களில் சிலருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அவர்களை  அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனம் வெகு தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. தகவல் கொடுத்து மூன்று மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...