நெல்லை அருகே அரசு பேருந்தில் இரவில் தனியாக பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் கைது!
ஐ.டி. நிறுவன 25 வயது பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அரசு பேருந்தில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தார்,அப்போது அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த மகாலிங்கம் (43) என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து செல்போன் மூலம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள், நடத்துனர் மகாலிங்கத்தை பிடித்து புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக புறக்காவல் நிலைய போலீசார், மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்துனர் மகாலிங்கத்தை கைது செய்தனர். அரசு பேருந்து நடத்துனர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரம் தனியாக பயணிக்கும் பெண்ணுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.