விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் விபத்து : ஒன்றோடு ஒன்று மோதியதில் மாடுகள் உட்பட ஏராளமானோர் படுகாயம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது குருபூஜை முன்னிட்டு எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் சாலையில், மாபெரும் மாட்டு வண்டி பட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய மாடுகளுக்கான சுற்று சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட சிறிய மாடுகளுக்கான சுற்று நடைபெற்றது. இந்த சிறிய மாடுகளுக்கான போட்டி தொடங்கிய சில மணித்துளிகளிலேயே தொடக்க இடத்திலேயே வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி  விபத்துக்குள்ளானது... இதில் 8 மாட்டு வண்டிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதியதில் 5 பார்வையாளர்கள் உட்பட 16 மாடுகள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த பார்வையாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி, மாட்டு வண்டிகள் செல்வதற்கு போதிய வழியின்றி சாலையின் இரு புறமும் அதிகப்படியான பார்வையாளர்கள் கூடியிருந்ததுதான் இந்த மாட்டு வண்டிகள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி பந்தய ரசிகர்கள் பந்தயத்தை காண வருகை தருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், பாதுகாப்பளிப்பதற்கும் தவறியது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.... ஆகையால் இனி வரும் காலங்களிலாவது மாட்டுவண்டி பந்தங்களுக்கு விளாத்திகுளம் உட்கோட்ட போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்ப்பாக உள்ளது.